என்னைப் பற்றி

என்னைப் பற்றி

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

எனது கமராவின் கண்கள்- 1

    போட்டோ எடுத்தல் எனது பொழுதுபோக்குகளில் ஒன்று.
நான் வெவ்வேறு இடங்களிற்கு கமராவைத் தூக்கிச் சென்று படம் எடுக்கும் ஒரு தொழில்முறைப் படப்பிடிப்பாளன் இல்லை.
ஆனால் எங்கேயாவது வெளியே செல்லும் போது இரசிப்பபவற்றை படம் பிடிப்பது வழமை. நான் எடுத்த படங்களில் வித்தியாசமான ரசிக்கக்கூடிய ஒரு சிலவற்றை இங்கு இணைத்துள்ளேன். அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலையையும் குறிப்பிட்டுள்ளேன்.

(1)
  இந்த புகைப்படம் திருகோணமலை புறநகர்ப் பகுதியில் பின்மாலை நேரத்தில் எடுக்கப்பட்டது. இங்கு சாதாரணமாக வீதியோரங்களில் மான்களைக் காணமுடியும். அவை மனிதர்களுடன் பழக்கப்பட்டுவிட்டதால் மனிதர்களைக் கண்டு விலகுவதில்லை. திருகோணமலை நகரின் சாலைகளில், "மான்கள் நடமாடும் இடம், வாகனங்களை மெதுவாக ஓட்டவும்" என்ற அறிவித்தல் பலகைகளை இடையிடையே காணமுடியும்..
    
(2)
   இந்தப் புகைப்படம் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவில் சூரியன் மறையும் நேரத்தில் எடுக்கப்பட்டது. நீண்ட தூர இடைவெளியைக் கொண்ட இரண்டு பனைமரங்கள். அந்தப் பிராந்தியம் வெட்டவெளியாக காணப்பட்டதால் இரு மரங்களுக்கும் இடையில் வேறு மரங்கள் காணப்படவில்லை. சூரியன் மறைந்த பின் வானத்தின் வர்ணத்தினை பின்னணியாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

(3)
   இது யாழ்ப்பாணம் நயினாதீவு நாகவிகாரையிலுள்ள தாதுகோபங்களில் ஒன்று. புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்த போது நயினாதீவுக்கும் வருகை புரிந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த நாகவிகாரைக்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்  பௌத்த யாத்திரீகர் பலர் வருவார்கள். இப்பிரதேசத்திற்கு வருவதற்கு தரைவழி மார்க்கம் ஒன்றுமில்லை. கடற்பயணம் தான் ஒரே வழி.

(4)
    இது நெடுந்தீவுக் கடலில் எடுக்கப்பட்ட படம். கரையிலிருந்து இருபது மீற்றர் தூரத்தில் கடலினுள் உள்ள பாறை மீது இந்த நண்டு இருக்கிறது. நண்டின் ஒரு பகுதி பாறையிலும் மறுபகுதி நீரிற்குள்ளும் உள்ளது. இந்த நண்டு வித்தியாசமான பச்சை நிறத்தில் இருந்தது.

(5)

    இவை திருகோணமலை கன்னியா பிரதேசத்திலுள்ள வெப்பநீரூற்றுக்கள். இங்கு எட்டு நீரூற்றுக்கள் உள்ளன. ஒவ்வொரு நீரூற்றும் தொட்டி போன்ற அமைப்பில் இருக்கிறது. எட்டு தொட்டிகளிலும் வெவ்வேறு வெப்பநிலைகளில் கொதிநீர் உள்ளது. ஆனால் அந்தப் பிரதேசத்தில் ஏனைய இடங்களிலுள்ள கிணறுகளில் சாதாரணமான வெப்பநிலை நீர் தான் உள்ளது.


தொடரும்..

புதன், 20 ஏப்ரல், 2016

டைட்டானிக்

  இது என்னுடைய கன்னிப்பதிவு.. தவறுகள் இருப்பின் தயங்காமல் எடுத்துரையுங்கள்..
    
   உலகில் இதுவரை ஏற்பட்ட கப்பல் விபத்துக்களில் மறக்கமுடியாத முக்கியமான ஒரு விபத்து டைட்டானிக் விபத்து ஆகும்..
 

    இன்றைக்கு 104 வருடங்களுக்கு முன்னர் உலகின் முதலாவது பிரம்மாண்டமான சொகுசுக் கப்பலான "டைட்டானிக்" பெரும் விபத்துக்கு உள்ளாகிய சோகசம்பவம் நிகழ்ந்தது..
    இவ் விபத்துச் சம்பவத்தைக் களமாக கொண்டு 1997 இல் பிரபல ஹாலிவுட் படமான ஜேம்ஸ்கமரூனின் டைட்டானிக் திரைப்படம் வெளியானது. இந்தப் படமும் டைட்டானிக் சம்பவம் மறக்கமுடியாத சம்பவமாகியதில் பங்கு கொண்டுள்ளது.
    1912 ஏப்ரல் மாதம் 14ம் திகதி இரவு 11.40 மணியளவில் வட அத்லாண்டிக் சமுத்திரத்தில் உருவாகிய பனிப்பாறை ஒன்றுடன் மோதி பெரும் விபத்திற்கு உள்ளாகியது..
 இது உலகின் மிகப்பெரிய கப்பல் விபத்து ஆகும்..

     டைட்டானிக் உருவாக்கப்பட்ட போது அதுவே உலகின் மிகப்பெரிய கப்பலாக இருந்தது..
1912 ஏப்ரல் மாதம் 10ம் திகதி புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை நோக்கி டைட்டானிக் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது..

      கப்பலில் மூன்று வகுப்புகள் இருந்தன..
முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பணக்காரர்கள் பயணம் செய்வதற்கும் மூன்றாம் வகுப்பு நடுத்தரவர்க்கத்தினர் பயணம் செய்வதற்கும் ஏதுவாக இருந்தது.. மூன்றாம் வகுப்பில் பயணித்த பலர் அமெரிக்காவிற்கு குடியேறுவதற்காக சென்றவர்கள்..
      முதல் வகுப்பின் அமைப்பு உல்லாச விடுதிகள் போன்றும் மூன்றாம் வகுப்பின் அமைப்பு ரயில் பெட்டிகளினைப் போலவும் இருந்தன...
இந்த வகுப்பு வேறுபாடுகள் டைட்டானிக் திரைப்படத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்..
அங்கு பணக்காரியான கதாநாயகியின் அறை ஹோட்டல் அறை போலவும் ஏழை ஓவியனான கதாநாயகன் தங்கும் அறை ரயில் பெட்டி போலவும் எலிகள் நிறைந்தும் காணப்படும்..

    கப்பல் இங்கிலாந்தின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட போது ஏற்பட்ட உந்துகையால் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பல் டைட்டானிக்கை நோக்கி இழுக்கப்பட்டது..
கப்பலில் 2240 பேர் பயணம் செய்தனர்...

     நான்கு நாட்கள் அமைதியாகப் பயணித்த கப்பலின் ஐந்தாவது நாட் பயணம் டைட்டானிக் இன் இறுதிப்பயணமாகிப் போனது..
ஏப்ரல் 14ம் திகதி இரவு 11.40 மணியளவில் வட அத்லான்டிக் பெருங்கடலில் உருவான பெரும் பனிப்பாறை ஒன்றுடன் மோதி பெரும் விபத்திற்குள்ளாகி மூழ்கத்தொடங்கியது...
பனிப்பாறை பற்றிய முன் எச்சரிக்கை டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் சென்ற வேறொரு கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட போதும் செய்தி டைட்டானிக்கை வந்து அடைவதற்குள் விபத்திற்குள்ளாகிப் போனது...
டைட்டானிக்கில் போதிய உயிர்காப்புப் படகுகள் இருக்கவில்லை.. டைட்டானிக் ஒரு போதும் மூழ்காது என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் தேவைக்கும் குறைவான படகுகளே இருந்தன..
அவற்றில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளிலிருந்த பணக்காரர்கள் ஏற்றப்பட மூன்றாம் வகுப்பிலிருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்...
இந்தச் சம்பவமும் டைட்டானிக் படத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கதாநாயகன் அவனது நண்பர்கள் மற்றும் கீழ்வகுப்பிலுள்ள பயணிகளுக்கு மேல்தளத்திற்கு வெளியேறும் பாதை அடைக்கப்பட்டிருக்கும்..

     இரவு 11.40க்கு மூழ்க ஆரம்பித்த கப்பல் இரண்டரை மணித்தியாலங்களின் பின் முற்றாக மூழ்கிவிட்டது..
கப்பல் மூழ்கிய போது கப்பலின் ஒரு முனை முற்றாக நீரில் அமிழ்ந்து மறுமுனை நீருக்கு வெளியே மேலுயர்த்தப்பட்டது, பின்னர் மேலுயர்த்தப்பட்ட கப்பலின்முனைப்ப
குதி பாரம் தாங்காமல் நடுப்பகுதியால் உடைந்து இரு பகுதிகளாக கடலில் மூழ்கியது.. இக் காட்சியும் திரைப்படத்தில் விரிவாக காட்டப்பட்டிருக்கும்.


       2240 பேர் பயணித்த கப்பலிலிருந்து 750க்கும் குறைவான பேரே உயிர் தப்பினர்..
1500க்கும் மேற்பட்ட பயணிகள் சாவடைந்தனர்..
இறந்தவர்களில் பலர் உயிர்காப்பு அங்கி அணிந்திருந்த போதும் சமுத்திரத்தில் இருந்த கடுங்குளிரில் உறைந்து மரணமடைந்தனர்..
கப்பல் மூழ்கிய போது அவ் இடத்தில் கடல் நீரின் வெப்பநிலை -2°செல்சியஸ்..
இந்த நிகழ்வும் டைட்டானிக் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்..
காதலியைக் காப்பாற்றிவிட்டு கதாநாயகன் குளிர் நீரில் விறைத்து இறப்பான், நாயகனின் முகம் மற்றும் தலையில் கடல்நீர் பனியாகப் படிவது காட்டப்பட்டிருக்கும்..

இந்தக்கப்பலின் எஞ்சிய பகுதிகள் 1985ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது..

உலகின் முதலாவது பெரும் பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் இப்பொழுது அத்லான்டிக் சமுத்திரத்தில் 12000 அடி ஆழத்தில் துண்டு துண்டுகளாக எஞ்சியிருக்கிறது...


_ நன்றி _